Wednesday, January 26, 2005

என் ஓட்டு விவேக்கிற்கே!

விவேக் ஓப்ராய்!

- இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் அல்ல!
- தமிழ் படம் எதிலும் நடித்தவரும் அல்ல!
- தமிழ் பேசக்கூடத்தெரிந்தவர் அல்ல!
- தமிழகத்தில் அவருக்கு ரசிகர் மன்றம் இருந்ததாக தெரியவில்லை.

சுனாமி பேரலைகளால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் விரைந்து வந்து, அரசினருடன் பேசி முறையான அனுமதி பெற்று, ஏற்பாடுகள் செய்து, ஒரு கிராமத்தை தத்து எடுத்து, அவர்களுடனேயே தங்கி, பாதிப்படைந்த மக்களுக்கு முடிந்த அளவுக்கு ஒரு சீரான வாழ்க்கையை அமைத்து கொடுத்தபின்னரே ஊருக்கு திரும்புவேன் என்று சபதமிட்டு சேவை செய்து வருகிறார்.

ஒரு முன்னணி கதாநாயகன் என்ற முறையில் அவரது நாட்கள் ஒவ்வொன்றும் கால்ஷீட்டுகளாக பல ஆயிரங்களுக்கோ சில லட்சங்களுக்கோ விலை போகக்கூடியதாக இருக்கும். அதையும் அவர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பல நாட்களுக்கு ஸ்டுடியோவுக்கே போகவில்லையென்றால், திரையுலகில் தமது இடத்தை வேறு யாராவது கைப்பற்றி விடுவார்களோ என்று கூட கவலைப்படுவதாக தெரியவில்லை.

சரி, இந்த கதையெல்லாம் இப்போ எதற்கு என்கிறீர்களா?

தமிழகத்துடன் அதிக தொடர்பு இல்லாத விவேக்கால் இந்த அளவுக்கு செய்ய முடியும் என்றால்,

- தமிழக ரசிகர்களிடமிருந்து ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்க காசு என்ற கணக்கில் வருமானம் பெற்றவர்கள்,
- மாநிலமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் ரசிகர் மன்றங்களையும் கொண்டவர்கள்,
- 'தலைவனின்' படத்தை முதல் காட்சியில் பார்க்காவிட்டால் உயிரையே விடக்கூடிய அபிமான ரசிகர்களை கொண்டவர்கள்,
- நாட்டிற்காக எதையும் செய்வேன் என வீர வசனம் பேசுபவர்கள்,
- 'வருவேன், வருவேன்' என்று வந்து கொண்டே இருப்பவர்கள்
- ரசிகர் மன்ற கூட்டங்களை அரசியல் மாநாடு போல நடத்தி, பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கே வயிற்றில் புளி கரைக்க முயல்பவர்கள்,
- வருங்கால முதல்வர் என்ற கனவுகளுடன் பவனி வருபவர்கள்,

இவர்களெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும்? செக் புத்தகத்திலிருந்து ஒரு தாளை கிழித்து கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டால் போதுமா? என்று நினைத்துப்பார்த்தேன். அவ்வளவுதான்!

ஒன்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தின் வருங்கால முதல்வர் திரையுலகிலிருந்துதான் வருவார் என்ற 'தலைவிதி' இருக்குமானால், எனது ஒட்டு விவேக்கிற்கே!


Thursday, January 13, 2005

நாகப்பட்டினம்!

பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமி அலையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம். உள்ளூர் சன் டிவி முதல் பிபிசி, சி.என்.என் வரை நிருபர்கள் கடற்கரையில் நின்று கையில் மைக் பிடித்து '.. நாகப்பட்டினத்திலிருந்து' என்று செய்தி வாசிக்கிறார்கள். பிரதமர், முதல்வர், கட்சித்தலைவர்கள் அனைவரும் எங்கள் ஊரை வந்து எட்டிப்பார்த்துவிட்டு செல்கிறார்கள். பல வெளி நாட்டு தினசரிகளில், இந்திய வரைபடத்தில் நாகப்பட்டினத்தை தனியாக குறிப்பிடுகிறார்கள். நாகப்பட்டினத்திலிருந்து வரும் செய்திகள், புகைப்படங்கள் தலைப்புச் செய்திகளாக இடம்பெறுகின்றன. ஒருமணி நேரத்தில் உலகப்புகழ் பெற்று விட்டது எங்கள் ஊர். ஆனால், இந்தப்புகழுக்கா ஆசைப்பட்டோம்?

ஒருவகையில் இத்தகைய புகழ் நாகைக்கு புதியது அல்ல.

விசுவின் ஏதோ ஒரு படத்தில் ஒரு காட்சி வரும்.. அது பற்றி நினைவில் இருப்பதை சொல்கிறேன்,

வீட்டு புரோக்கர்: "இந்த வீட்டிலே எல்லா வசதியும் இருக்கு சார். ஆனா.. காத்து வர்றதுததான் பிரச்னை.. ஜன்னலே கிடையாது"

வீடு பார்க்க வந்தவர்: "எனக்கு இந்த மாதிரி வீடுதான் வேணும். இந்த காத்தே வேணாம்னுதானே நாகப்பட்டினத்துலேருந்து ஓடி வந்திருக்கேன்!"

..அப்போதுதான் நாகப்பட்டினத்தில் பெரும் புயலடித்து ஓய்ந்திருந்தது.

11 நவம்பர் 1977 அன்று மாலை சீறலாக ஆரம்பித்த காற்று, அன்று இரவு கடும் உக்கிரத்துடன் ஊரையே புரட்டிப்போட்டது. பெரும் மழையும் சேர்ந்து கொண்டது. புயல் எழுப்பிய ஓசை குலை நடுங்க வைத்தது. வீட்டுக்கூறையின் ஓடுகள் பறந்து விழுந்தன. பல வீடுகளில் முற்றத்திற்கு மேல் தென்னங்கூரையால் காற்றுப்பந்தல் போட்டிருப்பார்கள். அவையெல்லாம் பிய்த்துக்கொண்டு பறந்தன. முழு காற்றுப்பந்தலும் பறந்து போய் வேறிடத்தில் விழுந்ததும் நடந்தது. இரும்பால் ஆன மின்சார கம்பங்கள் குச்சிகளைப்போல் உடைக்கப்பட்டதும், வளைக்கப்பட்டதும், 'காற்றிற்கு இவ்வளவு வலிமை உண்டா?' என்று மலைக்க வைத்தது.

ஒட்டு மொத்த இந்தியாவும் நாகப்பட்டினத்தை அறிந்தது அப்போதுதான் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு புயல் நாகையின் அழையா விருந்தாளியாக ஆகிப்போனது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தகவல் சொல்லி விடும், ' நான் வரப்போகிறேன்' என்று. சில முறை வந்து 'சும்மா நலம் விசாரித்து விட்டு' செல்லும். வேறு சில முறை வரும் வழியிலேயே திசை மாறி ஆந்திரா பக்கம் சென்று விடும். எப்படியோ புயல் என்பது நாகப்பட்டினத்தின் ஒரு அடையாளமாகவே மாறிப்போனது!

இந்த முறை கடலும் தன் பங்குக்கு வந்து, இருந்து, விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றிருக்கிறது. இனி 'சுனாமி' என்றாலும் நாகப்பட்டினம் நினைவுக்கு வரும்!


இருக்கட்டுமே! அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு இரு ஜப்பானிய நகரங்கள் புத்துயிர் பெற்று எழவில்லையா? அது போல் நாகப்பட்டினமும் வீறு கொண்டு எழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். அதற்கு முன், உறவுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் நெஞ்சங்கள் ஆறுதல் பெற வேண்டியும் பிரார்த்திப்போம்.