Tuesday, October 07, 2008

பழி தீர்த்தலும் மன்னித்தலும்!

சகோதரர் கோவி.கண்ணனின் 'இறைவன் படைக்கிறானா?' பதிவின் பின்னூட்டத்தில் திரு. தருமி இஸ்லாம் தொடர்பான சில கேள்விகளை கேட்டிருந்தார். அவரது சந்தேகங்களுக்கான பதில்களை எனக்குத் தெரிந்த அளவில் இங்கு தருகிறேன்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஒரு கருத்துப் பரிமாற்றமாக மட்டுமே நான் இதில் பங்கு பெறுகிறேனே தவிர விவாதமாக அல்ல. விவாதங்களினால் எந்த ஆக்கபூர்வமான விளைவுகளும் ஏற்படப் போவதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து!

தருமி அவர்களின் கேள்வி 1:

//அக்கிரமத்திற்கு எதிராக பழிதீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் மன்னித்து விடுவதே சிறந்தது என்று குர்ஆன் சொல்கிறது://


இந்த வாக்கியத்தின் முதல் பகுதியைத் தான் நான் கேள்விக்குட்படுத்துகிறேன். எந்த ஒரு மதத்திலும் பழிதீர்ப்பதையோ, கொலை செய்வதையோ நியாயப்படுத்துதல் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.


//இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;//


இன்னா செய்தாரையும் ஒறுத்தல் பற்றிப் பேசினால்தானே அது நல்வழிப்படுத்தும் வழியாக இருக்க முடியும். பழிக்குப் பழி என்று போதிப்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?


//அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)


எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)//


மேற்கண்ட இரு வாசகங்களும் தனிமனித நீதிபற்றிதான் கூறுகிறதாகத் தெரிகிறதேயொழிய நீங்கள் கீழ்க்கண்டவாறு சொல்வதுபோல்- //குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே என்பது இஸ்லாமிய அரசாங்கங்களுக்கான கட்டளை.// அரசாங்களுக்கு உரிய கட்டளைகளாகத் தெரியவில்லையே ..

பழிதீர்ப்பதும் கொலை செய்வதும்:

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு. (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (குர்ஆன் 2:179)

பழி தீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருப்பதன் நோக்கம், 'நாம் பழி தீர்க்கப் பட்டு விடுவோம்' என்ற அச்சத்தினால் குற்றமிழைக்க நினைப்பவர்களும் அதை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான். அப்படி இல்லாமல், என்ன குற்றம் புரிந்தாலும் நாம் மன்னிக்கப் பட்டு விடுவோம் என்ற நிலை இருந்தால், அது குற்றங்கள் மேலும் பெருக வழி வகுக்குமேயல்லாது குறைக்காது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்:

எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43)

அக்கிரமம் இழைக்கப்பட்ட ஒரு நபர் பழிதீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறதேயொழிய இது கட்டளையோ போதனையோ அல்ல. அப்படி அனுமதிக்கப் பட்டிருப்பதுகூட குற்றச் செயல்கள் பெருகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மாறாக, பழிதீர்ப்பதை விட குற்றவாளியை மன்னிப்பதன் மூலம் இன்னா செய்தாரை ஒறுப்பதே உறுதியான வீரமுள்ள செயல் என்று போதிக்கிறது இஸ்லாம். அனுமதி, போதனை இவ்விரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதையும் புரிந்து கொள்ளலாம்.

தனிமனித நீதியும் அரசாங்கங்களுக்கான கட்டளையும்:

அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)

எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)

அநீதி இழைக்கப் பட்டவருக்குத்தானே இந்தச் சலுகை? அவர் மீது அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று யார் முடிவு செய்வது? அநீதி இழைத்தவர் செல்வாக்கு மிக்க பலசாலி என்றால், பாதிக்கப்பட்ட எளியவர் எப்படி அவரை பழி தீர்ப்பார்? அநியாயமாக கொல்லப்பட்ட ஒருவருக்காக பழிதீர்க்க யாரும் இல்லை என்றால், கொலை செய்தவர் தண்டனையின்றி தப்பிவிட முடியுமா? தனக்குப் பிடிக்காத ஒரு நபரை ஒருவர் பழி தீர்த்து விட்டு, 'அவர் எனக்கு அநீதி இழைத்ததால்தான் நான் அப்படிச் செய்தேன்' என்று பொய் சொல்லி தப்பிக்க முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் என்ன என்று யோசித்தாலே, பாதிக்கப் பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர, குற்றங்களுக்குத் தண்டனை வழங்க, ஒரு அரசாங்க அமைப்பு அவசியம் என்பது தெளிவாகும். குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமைதானே தவிர தனிநபர்களின் பொறுப்பு அல்ல.

மற்ற கேள்விகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்கிறேன்..