Wednesday, December 21, 2005

அர்ஜென்டினா - 1

போனஸ் அய்ரஸ் (Buenos Aires) - அர்ஜென்டினாவின் தலைநகர். அழகிய இந்த தென்னமெரிக்க நகருக்கு அலுவலக வேலையாக சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கு எடுத்த சில புகைப்படங்கள்:
அகலமான சாலைகள்... பழமையும் புதுமையும் கலந்த கட்டிடங்கள்.. உலகின் மிக அகலமான சாலை என கருதப்படும் Avenida 9 de Julio இங்குதான் இருக்கிறது. (படத்தில் இருப்பது அந்த சாலை அல்ல!).


போனஸய்ரஸின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்று.


அர்ஜென்டினா பல்கலை கழக கட்டிடம்..

இப்போது பூப்பூக்கும் சீஸனாம்.. சாலைகள் நெடுக மரங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.

(இன்னும் வரும்)

Tuesday, December 20, 2005

துள்ளி எழுந்தது நாகப்பட்டினம்!

எனது முதல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:

"அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு இரு ஜப்பானிய நகரங்கள் புத்துயிர் பெற்று எழவில்லையா? அது போல் நாகப்பட்டினமும் வீறு கொண்டு எழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். "

இனி ஜூனியர் விகடன் 21-12-05 இதழில் வெளிவந்திருக்கும் ஸ்பெஷல் ஸ்டோரியிலிருந்து சில பகுதிகள்: (நன்றி ஜூனியர் விகடன்)




இன்றைக்கு ஒருவேளை சுனாமி அரக்கன், தான் விளையாடிய தேசத்தை சுற்றிப் பார்க்க வந்தால், ‘பழிவாங்கிய என்னைப் பார்த்து இப்படி ஒப்பாரி பாடியவர்களா இவர்கள்? கதறலும் உதறலும் உலுக்கிப் போட்டிருந்த என் காலடி விலாசம் எங்கே? நான் வந்துபோன சுவடைக் கூட சுக்குநூறாக்கி எழுந்து நிற்கிறதே இந்தக் கடலோரம்! இனி ஒருபோதும் இந்தப் பக்கம் வரக் கூடாது!' என்றெண்ணி கடலுக்குள்ளேயே முடங்கிப் போவான். அந்தளவுக்கு உலுக்கிப்போட்ட கவலைகளை உப்புக் கருவாடு கணக்காகக் காயப் போட்டுவிட்டு, கடலே கதியென பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது நாகப்பட்டினம்.

சுற்றிப்பார்க்க வந்த நமக்கு சுறுசுறுப்பு ஊசி போடும் கணக்காக, அதிகாலை வேளையிலும் குதிகால் அறுந்துபோகிற அளவுக்கு ஓடிஓடி உழைக்கிறார்கள் கடலோர வாசிகள்.

‘‘இதுல ஆச்சர்யப்பட என்ன தம்பி இருக்கு... சுனாமிக்கு முன்னாலகூட நாங்க இந்தளவுக்கு வேர்வைக் கொட்ட வேலை பார்த்தது இல்ல. அந்த சுனாமி வந்தபிறகு, வாழ்க்கையில எதிர்நீச்சல் போடறது எப்படினு நல்லாவே புரிஞ்சுட்டதால மாய்ஞ்சு மாய்ஞ்சு தொழில் பண்றோம். இடிஞ்சு போயிருந்த எங்களுக்கு, படகு தொடங்கி விரிச்சுப்படுக்க பாய் வரைக்கும் எல்லா உதவியும் கிடைச்சுச்சு. இனி மாசம் ஒரு லட்சம்னு ஓசிக்காசு கொடுத்தாலும் ஒரு இடத்துல 'அக்கடா'னு உட்காரத் தோணாது. துண்டை முறுக்கித் தலையில கட்டிக்கிட்டு கடலுல விளைஞ்சு கிடக்குறதை அள்ளிக்கிட்டு வர்றதுதானே நமக்குத் தெரிஞ்ச தொழில். அதை இப்போ அமோகமா செஞ்சுகிட்டு இருக்கோம்" என்று நம்பிக்கைப் பொங்கப் பேசுகிறார்கள், அக்கரைப்பேட்டைக்காரர்கள்.

சுனாமியால் சுவடு அழிக்கப் பட்ட நம்பியார் நகரில் புதிதாகத் தொடங்கப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள், சூறாவளியாக சுழன்று லாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கீச்சாங்குப்பத்தில் மோட்டார் படகுகள் சீறிக் கிளம்பியபடியே இருகின்றன. அரசு மற்றும் பொதுநல அமைப்புகளின் உதவியோடுதான் இதையெல்லாம் சாதித்திருக்கிறார்கள். எந்த ஏரியாவைச் சுற்றி வந்தாலும், நம்பிக்கைதான் கண்ணில் படுகிறது. அதேசமயம், அரசுத்தரப்பில் பல விஷயங்களில் சுணக்கம் இருப்பதையும் குறிப்பிட்டு, பொருமவும் செய்கிறார்கள் மக்கள்.

மடிந்த உயிர்களுக்கு மரியாதை!
நாகப்பட்டினத்தை துறைமுகமாக்கினால் வியாபார விருத்தியோடு மக்கள் நிரந்தர முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க முடியும் என்பது, கடலால் சூறையாடப்பட்டவர்களின் கண்ணீர்க் கோரிக்கை. ‘‘சுனாமிக்கு முன்னால இருந்தே நாங்க இந்தக் கோரிக்கையச் சொல்றோம். இப்போ ஏன் இதை இன்னும் வலியுறுத்திச் சொல்றோம்னா, நாங்க இழந்த பொருளாதாரம் எக்கச் சக்கம். அதையெல்லாம் திரும்ப ஈட்டுறது மட்டும் எங்க நோக்கமில்லை. இங்கே துறைமுகம் வந்துச்சுனா, மீனுக்கும் இறாலுக்கும் நல்ல ரேட் கிடைக்கும். நாலு வருஷத்துக்கு முன்னால கிலோ நானூறு ரூபாய்னு போன இறால், இப்போ வெறும் இருநூற்றைம்பதுக்குப் போறதே பெரும்பாடா இருக்கு. எங்க உழைப்புக்கும், மடிஞ்ச எங்க சொந்தங்களுக்கும் மரியாதை செய்றவிதமா நாகப்பட்டினத்தை துறைமுகமா மாற்ற அரசியல்வாதிகள் முயற்சி எடுக்கணும். அதுக்கப்புறம் எங்க வளர்ச்சி எக்கச்சக்கமாகிடும்" என்கிறார்கள், மீனை நம்பி வாழும் அத்தனை பேரும்.

இதற்கான முயற்சிகளை ஆரம்பம் தொட்டே முடுக்கிவிட்டுக் கொண்டிருக் கும் நாகை தொகுதியின் தி.மு.கழக எம்.பி யான ஏ.கே.எஸ்.விஜயன், ‘‘கப்பல் போக்குவரத்துத் துறையின் மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலு, துறைமுகம் அமைக்கத் தயாராக இருக்கிறார். ஆனால், எதிலுமே வழக்கம்போல் சுணக்கம் காட்டும் தமிழக அரசின் போக்குதான் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெயரளவிலான தீர்வுகளை மட்டுமே செய்யும் தமிழக அரசு, ஏன் இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருக்கிறது? தமிழக அரசு இன்றைக்குத் ‘தடையில்லா சான்றிதழ்' வழங்கினால், நாளையே துறைமுகப் பணிகளை ஆரம்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று ஆதங்கம் பொங்கச் சொன்னார்.


Monday, June 27, 2005

மலரும் நினைவுகள்

டோண்டு ராகவனின் ஹைப்பர் லிங்க் பதிவுகளைத் தொடர்ந்து சில மலரும் நினைவுகள்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை அலுவலக வேலையாக ஜக்கர்த்தா சென்றிருந்தேன். எங்கள் கிளை அலுவலகம் இருந்த அதே தளத்தில் ஒரு முக்கிய வாடிக்கையாளர் நிறுவனமும் இருந்தது. அங்கு தமிழர் ஒருவர் இருப்பதைப்பார்த்தேன். எங்கள் அலுவலக காரியதரிசியிடம் விசாரித்தபோது 'ஓ.. அவர் மிஸ்டர் சந்திரா. நான் உன்னை அவரிடம் அறிமுகம் செய்துவைக்கிறேன்' என்று என்னை அவரிடம் அழைத்துச்சென்றாள்.

நான் போனபோது அவர் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். காரியதரிசியுடன் வந்த என்னை அமரும்படி சைகை காட்டினார். சற்று நேரத்தில் பேசி முடித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தின் சினேக பாவத்துடன் கேட்டார் 'ம்ம்.. நீங்க என்ன தமிழா?'

'ஆமாம் சார்!' என்றேன் நான்.

'எந்த ஊரு?'

'நாகப்பட்டினம்'

'என்னது... நாகப்பட்டினமா?'

'ஆமாம்!?'

'நாகப்பட்டினமா?' என மறுபடியும் நம்பாதவர் போல கேட்டார்.

'ஆமாம் சார். ஏன் கேக்குறீங்க?' என்றேன் நான் குழப்பத்துடன்.

'நானும் நாகப்பட்டினம்தான்'

அதன்பிறகென்ன.. ஒரே ஊர்க்காரர்கள் இரண்டு பேர் சந்தித்தால் என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேச ஆரம்பித்தோம். 'எந்த ஸ்கூல்? வீடு எங்கே? இவரைத்தெரியுமா? அவரைத்தெரியுமா?' என்றெல்லாம். நான் படித்த சிஎஸ்ஐ பள்ளியில்தான் அவரும் படித்திருக்கிறார். வங்கி மேலாளராக இருந்த அவரது தந்தை சென்னைக்கு மாற்றலாகி சென்றபோது குடும்பத்துடன் சென்னை சென்று அங்கேயே தங்கிவிட்டதாக சொன்னார்.

என்னைவிட வயதில் மூத்தவரான சந்திரசேகரன் எனக்கு ஒரு நல்ல நண்பராகிவிட்டார். மிக குழப்பமான தருணங்களில் நான் ஆலோசனைக்காக நாடும் ஒரு சிலரில் சந்திராவும் ஒருவர். எங்கள் இரு நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பு பலமாக இருந்துவருகிறது. அதுபோல எங்கள் நட்பும். நாளை பணி நிமித்தம் அவரைச்சந்திப்பதற்காக ஜக்கர்த்தா செல்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

Sunday, May 01, 2005

நூல் விமர்சனம்

நூல் பெயர்: அடுத்த விநாடி
ஆசிரியர்: நாகூர் ரூமி

இந்த நூலை ஒவ்வொருவரும்(மனிதனும் அல்லது தமிழ் படிக்க தெரிந்த எவரும்) படித்தே ஆக வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

திருக்குரானில் ஒரு வசனம் வரும், 'மனிதர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்து கொள்கிறார்கள்' என்று- எவ்வளவு உண்மை. அதாவது வாழ்க்கையில் ஒருவனுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு அவனே பொறுப்பாளி. ஏனெனில் இறைவன் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி வைத்திருக்கிறான். வெற்றியின் இரகசியங்கள் இந்த நூலை படித்தால் உண்மை புரிந்து விடும் இறைமொழியின் அர்த்தங்கள் விளங்கி விடும்.

நாம் குறைந்த சக்தியை செலவு பண்ணி சிரிப்பதை விட அநியாயமாக அதிக சக்தி செலவு செய்து அழுது கொண்டிருக்கிறோம். இந்த புஸ்தகத்தை படித்தவர்கள் அழுவதை நிறுத்த தொடங்கி விடுவார்கள் என்பது உறுதி.

வியாபாரம் சரியில்லை என்று கடையை இழுத்து மூடுவதை கேள்விப் பட்டிருக்கிறேன். கூட்டம் சேரவில்லை என்று சினிமா கொட்டகைகள் மூடப்படுவதை படித்தும் இருக்கிறேன். ஆனால் என் ஆசை திருடர்களே இல்லை என்று சிறைச்சாலையை மூட வேண்டும் என்பது தான்.

ஊரில் நூலகம் ஒன்று திறந்தால் சிறைச்சாலையை மூடிவிடலாம் என்று மூத்தவர் மொழி ஒன்று உள்ளது. ஆனால் இந்த நூல் ஒன்றை திறந்தாலே சிறைச்சாலைகளை இழுத்து பெரிய திண்டுக்கல் பூட்டா வாங்கி போட்டு பூட்டிவிடலாம் என்பது அடியேனது மொழி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் திருடுகிறவனுக்கு ஈமான்(இறை நம்பிக்கை) கிடையாது என்று. அதாவது ஈமான் உள்ளவன் திருட மாட்டான் என்று பொருள்.

திருடன் ஏன் அடுத்தவர் பொருள் மீது கையை வைக்கிறான். அவனுக்கு நேர்மையாக வாழ வழி இல்லையா? அல்லது அப்படி வாழ வழி தெரிய வில்லையா? என்னைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் வாழ வழி தெரியாமல் என்று தான் சொல்வேன்.

இந்த நூல் வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டி..அனைவரும் படிக்க வேண்டும் குறைந்த பட்சம் ஒரு வாட்டி. மற்றதை இந்த நூலே பார்த்துக் கொள்ளும் இதற்கு நான் கியாரண்டி.

இந்த நூல் மதினா வாசிகளை போல் நம்மை கையை பிடித்து கொள்கிறது. எங்கே என்று கேட்கிறீர்களா? வேறு எங்கே? வெற்றியின் வாசலிற்கு தான்..

அல்லாஹ் எதையும் படைக்க நாடிய போது 'குன்'(ஆகுக) என்று சொன்னான் உடனே அது ஆகி விட்டது. அல்லாஹ்வின் நேரடி பிரதிநிதியான மனிதன் அதற்கு ஏற்றாற் போல் வாழ வேண்டும்..

இந்த புஸ்தகத்தை படித்தவர்களால் எதுவும் 'தெரியல' என்று சொல்ல முடியாது. இந்த புஸ்தகத்தை ஒழுங்காக பயிற்சியை மேற்கொண்டால் 'முடியல' என்றும் கூற முடியாது.

துவா
ஸலாம
அ.முஹம்மது இஸ்மாயில்

Sunday, March 06, 2005

திருமதி அரஃபாத்திடமிருந்து ஒரு மின்னஞ்சல்...

சென்ற வாரம் எனது inbox-ல் வந்து கிடந்த ஒரு மின்னஞ்சலின் அனுப்புனர் பெயரைப் பார்த்து நான் மயக்கம் போட்டு விழாத குறைதான்.

அந்தக் கடிதம் இப்படி தொடங்குகிறது; “பன்னாட்டு ஊடகங்கள் மூலம் உலக நடப்புகளை, முக்கியமாக மத்திய கிழக்கு, பாலஸ்தீன விவகாரங்களை அறிந்து கொண்டிருந்தீர்களெனில் இந்த கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தை தராது” என்று தொடங்கி, பிறகு அறிமுகப் படலம். “ நான் திருமதி. சுஹா அரஃபாத், சமீபத்தில் பாரிஸில் மரணமடைந்த பாலஸ்தீன தலைவரின் மனைவி”.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, எனது மின்னஞ்சல் முகவரி ஒரு பெரிய தலைவரின் மனைவிக்கு தெரியும் அளவிற்கு நான் பிரபலமாகி விட்டேனா என்று.

அடுத்தவரியில் அவர் தனது தற்போதைய நிலையை விளக்கிய போது அவர் மேல் பெரும் அனுதாபம் ஏற்பட்டது. அதை அவரது வார்த்தைகளிலேயே தருகிறேன், “I have been thrown into a state of antagonism, confusion, humiliation, frustration and hopelessness by the present leadership of the Palestinian Liberation Organization and the new Prime Minister. I have even been subjected to physical and psychological torture. As a widow that is so traumatized, I have lost confidence with everybody in the country at the moment.” த்ஸு.. த்ஸு..பாவம் இல்லே!

அது சரி, எதற்காக இதையெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்கிறீர்களா? அவரது கடிதத்தின் சாரம் இதுதான், “தற்போதைய பாலஸ்தீன அரசாங்கம் எனது கணவர் எனக்குத் தந்த பணம், சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து என்னையும் எனது மகளையும் நடுத்தெருவிலாக்க முயற்சி செய்து வருகிறது. நான் ஒரு 20 மில்லியன் டாலரை ஒரு வெளி நாட்டு நிறுவனத்தில் டெபாஸிட் செய்துள்ளேன். அதை நீங்கள் உங்கள் கணக்கில் பெற்று எங்களுக்காக பாதுகாப்பாக வைத்திருந்தால் நான் மிக நன்றியுடையவளாவேன். தங்களின் இந்த உதவிக்காக ஒரு குறிப்பிட்ட சதவிகித தொகையை தங்களுக்கு அளிக்கவும் சித்தமாக இருக்கிறேன். நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்கள் உறுதிப்படுத்தும் பட்சத்தில் இதுபோன்ற தொகையை மேலும் மேலும் உங்கள் கணக்கிற்கு அனுப்ப நான் தயார். தயவு செய்து இந்த விஷயத்தை மிக ரகசியமாக வைத்துக் கொள்ளவும்.”

ஒரு அபலை விதவைப்பெண்ணிற்கு உதவ வேண்டும் என்று மனம் துடித்தாலும், அவ்வளவு பெரிய தொகையை வைத்து பாதுகாப்பது ரொம்ப ரிஸ்க் என்பதால் நான் அவருக்கு பதில் எழுதவில்லை. அவருக்காக அனுதாபப்படுவதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அவர் வேறு யாருக்கும் இப்படி எழுதியிருக்கிறாரா? வேறு யாராவது அவருக்கு உதவுகிறார்களா என்பதும் தெரியவில்லை. பாவம் திருமதி. அரஃபாத்!

பின்குறிப்பு: திருமதி அரஃபாத்திற்கு தெரியும் அளவிற்கு நான் பிரபலமாகிவிட்டேனா என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா! அது மட்டுமல்ல, நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் ஆகிவிட்டேன் போலிருக்கிறது. எனது இமெயில் spam folder-ல் சுமார் 20 வெவ்வேறு லாட்டரி நிறுவனங்களிடமிருந்து வந்து இன்னும் திறக்கப்படாமலிருக்கும் மின்னஞ்சல்கள், அனைத்திலும் எனக்கே முதல் பரிசு விழுந்திருப்பதாக தலைப்பிலேயே அறிவிக்கின்றன. இதில் இன்னும் விஷேசம் என்னவென்றால், நான் எந்த லாட்டரியிலும் இதுவரை பங்கெடுத்ததேயில்லை.

Saturday, February 19, 2005

My Opinion..

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நான் படித்த நாகூர் ரூமி நூல்கள்:

நூல் 1: இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்

இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்களை களைய வேண்டி அதற்கு எளிய அறிமுகத்தை கடின முயற்சியுடன் நாகூர் ரூமி அவர்களால் எழுதப்பட்ட நூல் தான் இது.

ஒரு ஹதீஸ் நினைவிற்கு வருகிறது- ஒரு பெரிய யுத்தத்திற்கு பின்னர் பெருமானார் தனது தோழர்களிடத்தில் ‘பெரிய போருக்கு தயாராகுங்கள்’ என்று கூறினார்கள்- தோழர்களுக்கு விளங்க வில்லை. விபரம் கேட்ட போது, பெருமானார், ‘மனதை அடக்கி ஆள்வதே அத்தகைய போர்’ என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.

இந்த ஹதீஸின் ஒளி பல பக்கங்களுக்கு வெளிச்சம் காட்டினாலும் நான் இருந்த பக்கத்தை மட்டும் இங்கே வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறேன்-
அதாகப்பட்டது பெருமானார் பேசியது அவர்களது தோழர்களுக்கு விளங்க வில்லை அதோடு அவர்கள் தாங்களாக ஒரு விளக்கம் கொடுத்துக் கொள்ளாமல் அதற்கு பெருமானாரிடமே விளக்கத்தை கேட்டறிந்தார்கள்.
இது போல் பெருமானார் கூறியது சிலருக்கு புரியாத காரணத்தால் அவர்களாகவே ஏதேதோ விளக்கம் கொடுத்து விட்டு ‘இப்படி தான் இதற்கு விளக்கம்’ என்று கங்கணம் கட்டி நேசத்துடன் கூறி வருகிறார்கள் ஆனால் அது உண்மையில் நேசம் அல்ல வேஷம் என்று சிலருக்கு மட்டுமே தெரிய வாய்ப்புண்டு.

இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. அதாவது பெருமானார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க சொல்லி போதித்தார்கள். அவ்வளவு தான், யாரையும் வற்புறுத்த வில்லை.

அப்படி என்றால் சிலர் வாளெடுத்து தலையை துண்டித்து விட்டு, ‘அல்லாஹ¤ அக்பர்’ என்று கூறுகிறார்களே என்ற கேள்வி எழலாம். அவர்கள் இஸ்லாத்தின் பெயரை தானே முன் வைக்கிறார்கள் என்றும் வாதிடலாம்.

அரபியில் அல்லாஹ் என்ற வார்த்தை இறைவனை குறிக்கும். அதாவது ஒரு அரேபிய கிறிஸ்தவர் இறைவனை குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையை தான் பயன்படுத்துவார். பெருமானாரின் தந்தையின் பெயர் ‘அப்துல்லாஹ்’ என்பதாகும். பெருமானாரின் தந்தையை பெருமானார் அவர்கள் பார்த்தது கூட கிடையாது.
ஒருவன் யாரோ ஒரு அப்பாவியின் தலையை துண்டித்ததற்கு இறைவனுக்கு எப்படி சம்மந்தம் கிடையாதோ அப்படியே இஸ்லாத்திற்கும் அவனுக்கும் சம்மந்தமே கிடையாது. இந்த கருத்தை இந்த புஸ்தகம் தெளிவு படுத்தி விடுகிறது.

இந்த நூலை பற்றியும் தவறான விமர்சனங்கள் புரியாமல் தான் எழுந்துள்ளன. அவர்களுக்கு விளக்கம் பெற வேண்டும் என்ற ஆசையில்லை.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கூறுபவர்களல்ல அவர்கள் தான் பிடித்த முயலையே ஒட்டகம் என்று வாதிட்டு நம்ப வைத்தும் விடுவார்கள். அந்த சாமர்த்தியசாலிகள்(?) அவர்களாக அறிய வேண்டும் என்ற ஆசையுடன் வரும் போது தக்க விளக்கம் இந்த புஸ்தகத்திலேயே இருப்பதை காண்பார்கள்.
யானையை பற்றி குருடர்கள் தடவி பார்த்து வெவ்வேறு விதமாக கூறிய கதை நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் நல்ல வெளிச்சத்தில் உண்மையான ராஜ பார்வையுடன் எல்லா பக்கமும் சென்று அருமையாக இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

வெறுப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு விருப்புடன் படிக்க அனைவரையும் வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்
அ.முஹம்மது இஸ்மாயில்

Tuesday, February 15, 2005

புத்தாண்டும் பெருநாளும்!

மூன்று ஆண்டுகளுக்குமுன் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் என் சீன நண்பர் ஒருவர் என்னிடம் வந்து “புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என்றார்.


இடையிடையில் சில சிறு குறிப்புகள் கொடுத்தால்தான், மேற்கொண்டு தொடரும் உரையாடலை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

சிறுகுறிப்பு 1: சீனர்கள் தங்கள் புதுவருட பிறப்பை மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். அவர்களுக்கு வேறு சில திருநாட்கள் இருந்தாலும், புதுவருடம்தான் தலையாயது. பெரும்பான்மையான சீன நிறுவனங்கள் ஒரு வாரம், பத்து நாட்களுக்கு கூட விடுமுறை விட்டுவிடுவார்கள். தங்களது திருநாள் புத்தாண்டாக இருப்பதுபோல், மலாய், இந்தியர் போன்ற பிற இனத்தாருடன் அதிகம் பழகாத சீனர்கள், அவர்களின் திருநாட்களையும் அவரவர்களின் புத்தாண்டாகவே எண்ணிக்கொள்வது வழக்கம். இவர்களுக்கு தீபாவளி இந்தியர்களின் புத்தாண்டு, நோன்புப்பெருநாள் மலாய்காரர்களின் புத்தாண்டு.

நான் சீரியஸாக, “நன்றி நண்பரே!, ஆனால், இது எங்களுக்கு புத்தாண்டு அல்ல. நோன்புப்பெருநாள்!” என்றேன்.

“என்ன? இது புத்தாண்டு இல்லையா?”

“ஆமாம், எங்களுக்கு புத்தாண்டு வேறொரு நாள் வரும். அதை நாங்கள் சிறப்பாக கொண்டாடுவதில்லை!”

சிறுகுறிப்பு 2: சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய முஸ்லிம்களுக்கென்று சில பிரச்னைகள் உள்ளன. நான் முன்பு குறிப்பிட்ட பி.இ.அ.ப.சீனர்களுக்கு இந்தியர் என்றால் இந்துக்கள், முஸ்லிம்கள் எல்லோருமே மலாய்க்காரர்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. நான் பள்ளிவாசலுக்கு போவதைப்பார்த்தால் ‘நீ முஸ்லிமா!’ என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். என் மனைவி பர்தா அணிந்திருப்பதால் கடைக்காரர்கள் அவரிடம் மலாயில் பேசத்தொடங்கி விடுவார்கள். என்னை ‘இடையில் மதம் மாறினாயா?’ என்று கேட்டவர்களும் உண்டு. மேலே சொன்ன என் நண்பருக்கு நான் ஒரு இந்தியன், ஆனால் முஸ்லிம் என்பது தெரியும்.

“என்ன? நீ புத்தாண்டு கொண்டாடுவதில்லையா? நீ ஒரு முஸ்லிம்தானே? சிங்கப்பூரில் உள்ள மலாய் முஸ்லிம்களெல்லாம் நாளை புத்தாண்டு கொண்டாடப் போகிறார்கள். பல ஆண்டுகளாக இங்கு வசிக்கும் நீ கொண்டாடப் போவதில்லையா? எப்போதுதான் இங்குள்ள வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உன்னை மாற்றிக் கொள்ளப் போகிறாயோ தெரியவில்லை!” என்று ஒரு நீண்ட உபதேசம் நிகழ்த்தத் தொடங்கிவிட்டார்.

“நண்பரே! நண்பரே! நாளை நான் கொண்டாடப்போவதில்லை என்று சொல்லவில்லையே! கொண்டாட்டத்தின் பெயர்தான் வேறு என்று சொன்னேன்!” என்று சொல்லி, இஸ்லாமிய பெருநாட்களைப்பற்றி சிறு விளக்கம் வேறு அளித்து அவரை அனுப்பி வைத்தேன்.

அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பெருநாட்களின்போது ‘உனக்கு எப்படி வாழ்த்து சொல்ல வேண்டும்?’ என்று கேட்டு, அதன்படி வாழ்த்து சொல்வார்.

சிறுகுறிப்பு 3: ஆங்கில காலண்டர் முறை பூமி-சூரியன் சுழற்சி அடிப்படையில் அமைந்திருப்பதை நாம் அறிவோம். சீன காலண்டர் முறை இதிலிருந்து மாறுபட்டது. அது சந்திர சுழற்சி முறையில் அமைந்தது. அதனால் சீன புத்தாண்டை ‘சந்திரப் புத்தாண்டு’ என்றும் அழைப்பார்கள்.

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு விடுமுறை முடிந்தபிறகு என் நண்பரை முதன் முறையாக சந்தித்தபோது, நான் முந்திக்கொண்டு “புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என்றேன்.

“நன்றி! ஆனால் நான் உனக்கு வாழ்த்து சொல்ல முடியாதே! இது சீன புத்தாண்டு ஆயிற்றே!” என்றார் நண்பர்.

“தாராளமாக வாழ்த்து சொல்லலாம். இது முஸ்லிம்களுக்கும்தான் புத்தாண்டு” என்றேன் நான்.

“அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டார் நண்பர்.

“ஆம். சீன காலண்டரைப்போல இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டரும் சந்திர சுழற்சி முறையில் அமைந்ததுதானே!” என்றேன்.

“இரு புத்தாண்டும் ஒரே நாளில்தான் என்பது எனக்கு இத்தனை நாள் தெரியாதே!”

“இத்தனை நாள் இப்படி இல்லை. இந்த ஆண்டுதான் இப்படி அமைந்துள்ளது” என்றேன் நான்.

“ஓஹோ.. அப்படியென்றால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இரு புத்தாண்டுகளும் சேர்ந்தே வரும் என்று சொல்!” என்ற நண்பர் எனக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு விடைபெற்றார்.

இரண்டு காலண்டர் முறையும் சந்திர சுழற்சி முறையில் அமைந்தது என்றால் இரு புத்தாண்டுகளும் ஒரே நாளில் வருவதுதானே முறை? அதென்ன கணக்கு, இந்த ஆண்டும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும்தான் இப்படி? என்று குழம்புகிறீர்களா? அதற்காகத்தான்,

சிறுகுறிப்பு 4: ஆங்கில காலண்டர் வருடத்தைவிட சீன/இஸ்லாமிய காலண்டர் வருடத்தில் 11 நாட்கள் குறைவு. ஆங்கில மாதங்கள் 30,31 நாட்களைக் கொண்டவை என்றால், சீன/இஸ்லாமிய மாதங்கள் 29,30 நாட்களைக் கொண்டவை. இவ்வாறு ஏற்படும் வித்தியாசத்தை சரிக்கட்ட சீன காலண்டரில் ஒரு ஏற்பாடு இருக்கிறது. மூன்று வருடங்களில் துண்டுவிழும் 33 நாட்களை சேர்த்து, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒருமாதத்தை கூட்டிவிடுவார்கள். அதாவது இரண்டு வருடங்களுக்கு 12 மாதங்கள் என்றால் மூன்றாவது வருடத்தில் 13 மாதங்கள் இருக்கும். இஸ்லாமிய காலண்டரில் இந்த ஏற்பாடு கிடையாது. அதனால்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து வந்துள்ள இரு புத்தாண்டுகளும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்ந்தே வரும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சீன காலண்டரில் 13வது மாதம் சேர்க்கப்படும்போது இந்த நிலை மாறிவிடும்.

கொசுறு தகவல்: சிங்கப்பூரில் அலுவலகங்கள், அடுக்கு மாடி வீடுகள் என சொத்துக்கள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கும் அரபுக்கள் சிலர், தங்களுக்கு மாதவாடகை இஸ்லாமிய காலண்டர் அடிப்படையில்தான் தரவேண்டும் என்று அடம் பிடிப்பார்களாம். மூன்று வருடத்திற்கு ஒரு மாதம் போனஸாக கிடைக்கிறதே!

Wednesday, January 26, 2005

என் ஓட்டு விவேக்கிற்கே!

விவேக் ஓப்ராய்!

- இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் அல்ல!
- தமிழ் படம் எதிலும் நடித்தவரும் அல்ல!
- தமிழ் பேசக்கூடத்தெரிந்தவர் அல்ல!
- தமிழகத்தில் அவருக்கு ரசிகர் மன்றம் இருந்ததாக தெரியவில்லை.

சுனாமி பேரலைகளால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் விரைந்து வந்து, அரசினருடன் பேசி முறையான அனுமதி பெற்று, ஏற்பாடுகள் செய்து, ஒரு கிராமத்தை தத்து எடுத்து, அவர்களுடனேயே தங்கி, பாதிப்படைந்த மக்களுக்கு முடிந்த அளவுக்கு ஒரு சீரான வாழ்க்கையை அமைத்து கொடுத்தபின்னரே ஊருக்கு திரும்புவேன் என்று சபதமிட்டு சேவை செய்து வருகிறார்.

ஒரு முன்னணி கதாநாயகன் என்ற முறையில் அவரது நாட்கள் ஒவ்வொன்றும் கால்ஷீட்டுகளாக பல ஆயிரங்களுக்கோ சில லட்சங்களுக்கோ விலை போகக்கூடியதாக இருக்கும். அதையும் அவர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பல நாட்களுக்கு ஸ்டுடியோவுக்கே போகவில்லையென்றால், திரையுலகில் தமது இடத்தை வேறு யாராவது கைப்பற்றி விடுவார்களோ என்று கூட கவலைப்படுவதாக தெரியவில்லை.

சரி, இந்த கதையெல்லாம் இப்போ எதற்கு என்கிறீர்களா?

தமிழகத்துடன் அதிக தொடர்பு இல்லாத விவேக்கால் இந்த அளவுக்கு செய்ய முடியும் என்றால்,

- தமிழக ரசிகர்களிடமிருந்து ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்க காசு என்ற கணக்கில் வருமானம் பெற்றவர்கள்,
- மாநிலமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் ரசிகர் மன்றங்களையும் கொண்டவர்கள்,
- 'தலைவனின்' படத்தை முதல் காட்சியில் பார்க்காவிட்டால் உயிரையே விடக்கூடிய அபிமான ரசிகர்களை கொண்டவர்கள்,
- நாட்டிற்காக எதையும் செய்வேன் என வீர வசனம் பேசுபவர்கள்,
- 'வருவேன், வருவேன்' என்று வந்து கொண்டே இருப்பவர்கள்
- ரசிகர் மன்ற கூட்டங்களை அரசியல் மாநாடு போல நடத்தி, பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கே வயிற்றில் புளி கரைக்க முயல்பவர்கள்,
- வருங்கால முதல்வர் என்ற கனவுகளுடன் பவனி வருபவர்கள்,

இவர்களெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும்? செக் புத்தகத்திலிருந்து ஒரு தாளை கிழித்து கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டால் போதுமா? என்று நினைத்துப்பார்த்தேன். அவ்வளவுதான்!

ஒன்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தின் வருங்கால முதல்வர் திரையுலகிலிருந்துதான் வருவார் என்ற 'தலைவிதி' இருக்குமானால், எனது ஒட்டு விவேக்கிற்கே!


Thursday, January 13, 2005

நாகப்பட்டினம்!

பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட சுனாமி அலையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம். உள்ளூர் சன் டிவி முதல் பிபிசி, சி.என்.என் வரை நிருபர்கள் கடற்கரையில் நின்று கையில் மைக் பிடித்து '.. நாகப்பட்டினத்திலிருந்து' என்று செய்தி வாசிக்கிறார்கள். பிரதமர், முதல்வர், கட்சித்தலைவர்கள் அனைவரும் எங்கள் ஊரை வந்து எட்டிப்பார்த்துவிட்டு செல்கிறார்கள். பல வெளி நாட்டு தினசரிகளில், இந்திய வரைபடத்தில் நாகப்பட்டினத்தை தனியாக குறிப்பிடுகிறார்கள். நாகப்பட்டினத்திலிருந்து வரும் செய்திகள், புகைப்படங்கள் தலைப்புச் செய்திகளாக இடம்பெறுகின்றன. ஒருமணி நேரத்தில் உலகப்புகழ் பெற்று விட்டது எங்கள் ஊர். ஆனால், இந்தப்புகழுக்கா ஆசைப்பட்டோம்?

ஒருவகையில் இத்தகைய புகழ் நாகைக்கு புதியது அல்ல.

விசுவின் ஏதோ ஒரு படத்தில் ஒரு காட்சி வரும்.. அது பற்றி நினைவில் இருப்பதை சொல்கிறேன்,

வீட்டு புரோக்கர்: "இந்த வீட்டிலே எல்லா வசதியும் இருக்கு சார். ஆனா.. காத்து வர்றதுததான் பிரச்னை.. ஜன்னலே கிடையாது"

வீடு பார்க்க வந்தவர்: "எனக்கு இந்த மாதிரி வீடுதான் வேணும். இந்த காத்தே வேணாம்னுதானே நாகப்பட்டினத்துலேருந்து ஓடி வந்திருக்கேன்!"

..அப்போதுதான் நாகப்பட்டினத்தில் பெரும் புயலடித்து ஓய்ந்திருந்தது.

11 நவம்பர் 1977 அன்று மாலை சீறலாக ஆரம்பித்த காற்று, அன்று இரவு கடும் உக்கிரத்துடன் ஊரையே புரட்டிப்போட்டது. பெரும் மழையும் சேர்ந்து கொண்டது. புயல் எழுப்பிய ஓசை குலை நடுங்க வைத்தது. வீட்டுக்கூறையின் ஓடுகள் பறந்து விழுந்தன. பல வீடுகளில் முற்றத்திற்கு மேல் தென்னங்கூரையால் காற்றுப்பந்தல் போட்டிருப்பார்கள். அவையெல்லாம் பிய்த்துக்கொண்டு பறந்தன. முழு காற்றுப்பந்தலும் பறந்து போய் வேறிடத்தில் விழுந்ததும் நடந்தது. இரும்பால் ஆன மின்சார கம்பங்கள் குச்சிகளைப்போல் உடைக்கப்பட்டதும், வளைக்கப்பட்டதும், 'காற்றிற்கு இவ்வளவு வலிமை உண்டா?' என்று மலைக்க வைத்தது.

ஒட்டு மொத்த இந்தியாவும் நாகப்பட்டினத்தை அறிந்தது அப்போதுதான் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு புயல் நாகையின் அழையா விருந்தாளியாக ஆகிப்போனது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தகவல் சொல்லி விடும், ' நான் வரப்போகிறேன்' என்று. சில முறை வந்து 'சும்மா நலம் விசாரித்து விட்டு' செல்லும். வேறு சில முறை வரும் வழியிலேயே திசை மாறி ஆந்திரா பக்கம் சென்று விடும். எப்படியோ புயல் என்பது நாகப்பட்டினத்தின் ஒரு அடையாளமாகவே மாறிப்போனது!

இந்த முறை கடலும் தன் பங்குக்கு வந்து, இருந்து, விருந்து சாப்பிட்டுவிட்டு சென்றிருக்கிறது. இனி 'சுனாமி' என்றாலும் நாகப்பட்டினம் நினைவுக்கு வரும்!


இருக்கட்டுமே! அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு இரு ஜப்பானிய நகரங்கள் புத்துயிர் பெற்று எழவில்லையா? அது போல் நாகப்பட்டினமும் வீறு கொண்டு எழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். அதற்கு முன், உறவுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் நெஞ்சங்கள் ஆறுதல் பெற வேண்டியும் பிரார்த்திப்போம்.