Monday, March 31, 2008

ரவி காந்த் சர்மா என்கிற 'இந்தியாவின் சொத்து'!

டெல்லி பத்திரிகையாளர் ஷிவானி படுகொலை வழக்கில், ஐ.ஜியான ரவிகாந்த் சர்மா குற்றவாளி என வந்துள்ள தீர்ப்பு சில சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

நீதிமன்றத்தால் 'குற்றவாளி' என தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமையைப் பெறுகிறார் ரவிகாந்த் சர்மா.

தகாத உறவு, கூலிப் படைத் தொடர்பு, தலைமறைவு என அடுக்கடுக்கான கறைகளைச் சுமந்திருக்கிறார் ரவிகாந்த் சர்மா. அதோடு, தன் மனைவியை ஏவிவிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மீதே அவதூறு கிளப்பி, அந்தக் களேபரங்களுக்கிடையில் புகுந்து தப்பிக்கப் பார்த்ததன்மூலம், புதியதோர் குற்றவியல் 'அத்தியாயமே' படைத்துவிட்டார்!

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் காவல் துறையின் உயரதிகாரி என்பதற்காக சலுகை காட்டாமல், அரசியல்ரீதியான தந்திரங்களுக்குபம் பணிந்துவிடாமல், கடமையே கண்ணாகச் செயல்பட்டு அவருக்குத் தண்டனை பெற்றுத் தந்திருக்கின்றனர் விசாரணை அதிகாரிகள். இதன் மூலம் காவல் துறையின் பெருமை மிக்க இன்னொரு பக்கத்தை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் இவர்கள்!

ஆனால், சர்ச்சை வேறு இடத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சாஸ்திரி தேவையில்லாத ஒரு விவாதத்திற்கு அடிபோட்டிருக்கிறார். இந்தக் குற்றத்தை மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் சர்மா இந்த நாட்டின் ஒரு சொத்து என தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருக்கும் அவர் இந்தக் காரணத்தினாலேயே சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்காமல் குறைந்த பட்ச தண்டனையான ஆயுள் தண்டனை விதித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்புடைய ஒரு உயரதிகாரியே திட்டமிட்டு ஒரு கொலை செய்கிறார் என்றால், அவருக்கு அதிக பட்ச தண்டனை விதிப்பதா? குறைந்த பட்ச தண்டனை விதிப்பதா? இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணமாகி விடாதா?

ஹாங்காங்கிலிருந்து செயல்படும் ஆசிய மனித உரிமைக் கழகம் இத்தீர்ப்புப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் கடைசிப் பத்தி இப்படிச் சொல்கிறது:

"ஒரு தாயை திட்டமிட்டு கொலை செய்தவர் என நிரூபணமான ஒரு கொலைகார காவல்துறை அதிகாரி நாட்டின் சொத்தாக இருக்க முடியாது. மாறாக ஒட்டு மொத்த இந்திய காவல்துறைக்கே ஒரு களங்கம். இப்படிப்பட்ட ஒரு நபரை புகழும் ஒரு நீதிபதி பாரபட்சமில்லாதவராக இருக்க முடியாது. மாறாக நீதித்துறையின் மீதே சந்தேக நிழலை இவர் படரச் செய்கிறார்".

நன்றி: ஆனந்த விகடன் 02-04-08