Tuesday, January 22, 2019

அழைப்பு

Ubudiah Masjid, Perak, Malaysia
மாம் சாஹிப் மக்ரிப் தொழுகை முடிந்து வீட்டிற்கு வரும்போது அவருடைய கைபேசி ஒலித்தது. யாரோ புது எண், மலேஷியாவிலிருந்து அழைக்கிறார்கள்.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

‘வ அலைக்குமுஸ் ஸலாம் உஸ்தாத். நான் மலேஷியாவிலிருந்து யூனுஸ் பேசுறேன். என்னை ஞாபகம் இருக்கா?”

எந்த யூனுஸ்? என்று கேட்க எத்தனித்தபோதே அவருக்கு ஞாபகம் வந்து விட்டது. “அட..தம்பி யூனுஸ்.! எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் உஸ்தாத். அல்ஹம்துலில்லாஹ். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நானும் நல்லா இருக்கேன், அல்ஹம்துலில்லாஹ்!”

“உஸ்தாத், நீங்க மலேஷியாவிலிருந்து போன பிறகு உங்களைத் தொடர்பு கொள்ளப் பல தடவை முயற்சி செய்தேன். உங்க நம்பர் கிடைக்கலை. சமீபத்துல உங்க நண்பர் இஸ்மாயிலைப் பார்த்தேன். அவர் கிட்டதான் உங்க நம்பர் வாங்கி பேசுறேன். இன்ஷாஅல்லாஹ் அடுத்த வாரம் நான் உம்ரா போக இருக்கேன். எனக்காக துஆ செய்யுங்க உஸ்தாத்.”
“மாஷா அல்லாஹ். கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. அல்லாஹ் உங்கள் பயணத்தை எளிதாக்கி உங்கள் உம்ராவை ஏற்று அருள் புரிவானாக”

“அல்ஹம்துலில்லாஹ். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நீங்கள் எனக்குச் செய்த உதவியையும் நான் மறக்க மாட்டேன்.” நாத் தழுதழுக்கச் சொன்னார் யூனுஸ்.

oOo

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது அது. அப்போது இமாம் சாஹிப் மலேஷியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இமாமாக இருந்தார். மாலை வேளை அஸ்ருத் தொழுகை முடிந்ததும் காலாற நடப்பதும் அப்பகுதி மக்களிடம் அளவளாவுதலும் இமாம் சாஹிபின் வழக்கமாக இருந்தது. அன்று ஏனோ நடப்பதற்கு மனமில்லை. பள்ளி வாசலுக்கு அருகிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது பள்ளியைக் கடந்து சென்ற ஒரு வாலிபர் சற்றே தயங்கி நின்றார். அவரது ஆடையில், நெற்றியில், கழுத்தில் தொங்கிய மாலையில் அவரது மத நம்பிக்கையின் அடையாளங்கள் பளிச்சென்று தெரிந்தன. ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அவருடைய கண்களில் தெரிந்தது.

தயங்கி நின்ற அவரை “தம்பி.. உள்ளே வாங்க” என்று அழைத்தார் இமாம் சாஹிப். உள்ளே வந்தவர் இன்னும் தயங்கியவாறே “நானெல்லாம் இங்கே உள்ளே வரலாமா?” என்று கேட்டார். “தாராளமா வரலாம். தயக்கமே வேண்டாம். இப்படி உட்காருங்க.” என்று அருகிலிருந்த இருக்கையைச் சுட்டினார் இமாம்.

அந்த இருக்கையில் அமர்ந்த அந்த வாலிபர் சற்று உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். ஏதோ கேட்க விரும்பியதைப் போலத் தெரிந்தது. ஆனால் பேச நா எழவில்லை. திடீரென கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோட தேம்பி அழ ஆரம்பித்தார் அவர்.

அவர் முதுகில் தடவிக் கொடுத்து ஆசுவாசப் படுத்திய இமாம், அவரே பேசட்டும் என்று காத்திருந்தார். கொஞ்ச நேரம் ஆனதும் தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்ட அந்த வாலிபர் சொன்னார், “நான் எத்தனையோ முறை இந்த மசூதியைக் கடந்து போயிருக்கேன். அப்பல்லாம் எனக்கு எதுவும் தோன்றியதில்லை. ஆனா இன்னிக்கு இந்த வாசலைத் தாண்டுரப்போ இது உள்ளே போகணும்னு தோணுச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நீங்களும் என்னை உள்ளே கூப்பிட்டீங்க. உள்ள வந்ததும் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டுச்சு. ஒரு விதமான வைப்ரேஷன் அது. என்னைக் கட்டுப்படுத்திக்க முடியாம அழுகை வந்துச்சு” என்றவர் சற்று நிதானித்தவராக “நான் உங்களை ஒன்னு கேக்கலாமா?” என்றார்.

“தராளமா கேளுங்க தம்பி”

“நான் உங்க மதத்துல சேரனும். அதுக்கு நான் என்ன செய்யணும்?”

‘சட்’டென்று வந்த அந்தக் கேள்வியை எதிர்பார்க்காத இமாம் சற்றே திகைப்படைந்தார்.

“அது மிக எளிதானதுதான் தம்பி. நம்மைப் படைத்த இறைவன் அல்லாஹ் ஒருவனே என்பதும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பதும்தான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை. இந்த இரண்டையும் மனதார நம்பி, வாயால் மொழிந்தாலே நீங்கள் முஸ்லிம் ஆகி விடுவீர்கள்.”
“அப்படின்னா எனக்கு இப்பவே அதைச் சொல்லித் தர முடியுமா?”

“இன்றிலிருந்து நீங்கள் ஒரு புது வாழ்வைத் துவங்கப் போகிறீர்கள். இந்தத் துவக்கம் உங்களுக்கு இனிதாக அமையட்டும். நன்றாக குளித்துச் சுத்தம் செய்து கொண்டு வாருங்கள்”

‘ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் கேட்டு விட்டார், வீட்டிற்குப் போய் ஆற அமர யோசித்தார் என்றால் மனம் மாறவும் வாய்ப்பிருக்கிறது’ என்று இமாம் எண்ணிக் கொண்டார்.

ஆனால் சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளித்து, தூய்மையான ஆடை அணிந்தவராக அந்த வாலிபர் திரும்பி வந்து விட்டார். இமாம் சொல்லித்தந்த ஷஹாதத் கலிமா எனும் உறுதிமொழியை உளமார ஏற்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

“உங்களுக்கு விருப்பமான இஸ்லாமியப் பெயர் எதுவும் இருக்கிறதா?” என்று அந்த வாலிபரிடம் கேட்டார் இமாம்.

“அப்படி எதுவும் இல்லை. உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?”

“என் பெயர் யூனுஸ். இது இறைத்தூதர் ஒருவரின் பெயர்”

“அந்தப் பெயரையே எனக்கும் சூட்டி விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார் அந்த வாலிபர்.

وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.” 2:213

அந்த அளவற்ற அருளாளனின் கருணையை நினைவு கூர்ந்தவராக தன் வீட்டை நோக்கி நடந்தார் இமாம் யூனுஸ்.

oOo

(இதுவொரு சிறுகதை அல்ல; உண்மை நிகழ்வொன்றின் சுருக்கம்)சத்தியமார்க்கம்.காம்   தளத்தில் வெளியானது