Tuesday, April 01, 2008

இரும்பு மனிதர் மிட்டல்!

Forbes பத்திரிக்கையின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி உலகின் ஆகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸுக்கு அடுத்ததாக நான்காம் இடத்தில் இருப்பவர் லக்ஷ்மி மிட்டல். இங்கிலாந்தில் வசிக்கும் பணக்காரர்களின் பட்டியலில் 2005-லிருந்து முதலிடத்தை பெற்றிருப்பவரும் இவர்தான். இவரது நிறுவனமான Arcelor Mittal உலக இரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. மிட்டல் இந்நிலையை அடைந்தது மிகக் குறுகிய காலத்தில்தான்.

கிடைக்கும் வாய்ப்புகளை திறமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுரியம், துணிச்சலான முடிவுகள், நட்டத்தில் நடந்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களை லாபகரமானதாக மாற்றும் திறமை; இவையே அவரது வெற்றியின் ரகசியங்கள் என்று சொல்லப்படுகிறது.

முதன் முதலாக மிட்டலின் பெயர் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டது 2002-ல். அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேர் ருமேனிய அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். ருமேனிய அரசிற்கு சொந்தமான இரும்பு ஆலை ஒன்றை மிட்டலுக்கு விற்பதை ஆதரித்து அக்கடிதம் எழுதப் பட்டிருந்தது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் மிட்டல் டோனி ப்ளேரின் கட்சி வளர்ச்சி நிதிக்கு 125,000 பவுண்டுகள் நன்கொடை அளித்திருந்தார். பிரிட்டிஷ் குடிமகனாகக் கூட இல்லாத ஒருவருக்காக பிரிட்டிஷ் பிரதமர் பரிந்து பேசுவது ஏன் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இருப்பினும் 'தான் செய்ததில் தவறு ஒன்றுமில்லை' என ப்ளேர் சமாளித்து விட்டார்.

மிட்டலின் குடும்பத்தினர் ஏற்கனவே இந்தியாவில் இரும்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள்தான். அதே துறையில் செல்வாக்கு மிக்கவையாக விளங்கிய இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் டாடா போன்ற மெகா நிறுவனங்களுடன் போட்டியிட்டு தனது நிறுவனத்தை வளர்ப்பது மிக சிரமமான காரியம் என்று உணர்ந்த மிட்டலின் தந்தை தனது 25 வயது மகன் இந்தோனேஷியாவில் ஒரு இரும்பு ஆலை அமைக்க உதவினார். இளைய மிட்டலின் மேற்பார்வையினால் அந்த ஆலை வெற்றிகரமாக நடக்கத் தொடங்கியது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் மிட்டல் வீட்டுக் கதவை தேடி வந்து தட்டின!

மிட்டலின் ஆலைக்கு கச்சாப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த டிரினிடாட் அரசிற்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று மிகச் சிரமதசையில் நடந்து கொண்டிருந்தது. மிட்டலின் வெற்றிகரமான தொழில் முனைப்பைப் பார்த்த டிரினிடாட்காரர்கள், தங்கள் நிறுவனத்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தும்படி மிட்டலுக்கு அழைப்பு விடுத்தனர். மேனேஜ்மெண்ட் வட்டாரங்களில் இதை turn-around strategy என்பார்கள். மகிழ்ச்சியுடன் அப்பொறுப்பை ஏற்ற மிட்டல் 1994-ல் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிட்டத்தட்ட அதே சமயத்தில் மெக்ஸிகோ, கனடா மற்றும் ஜெர்மனியில் மூன்று இரும்பு ஆலைகளை மிட்டல் வாங்கினார். நட்டத்தில் நடந்து கொண்டிருந்த இந்நிறுவனங்களை யார் தலையிலாவது கட்டிவிட அந்தந்த நாட்டு அரசுகள் முயன்று கொண்டிருந்தன! ஆனால் மிட்டலின் கண்களுக்கோ அவற்றில் புதைந்திருந்த வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் தெளிவாகத் தெரிந்தன.

90-களின் இறுதியில், அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிட்டல் கால் பதித்திருந்தார். 2006-ல் பிரான்ஸின் பழம்பெரும் நிறுவனங்களில் ஒன்றான Arcelor-ஐ மிட்டல் வாங்க முயன்றது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலவித எதிர்ப்புகளையும் சமாளித்துத்தான் மிட்டல் Arcelor-ஐ கைப்பற்றினார்.

இன்று சீனாவில் மிட்டலுக்குச் சொந்தமாக ஒரு ஆலை இருக்கிறது. இன்னொன்றில் பங்குதாரராக இருக்கிறார்.

Arcelor Mittal நிறுவனத்தின் ஊக்க வாசகம் (Motto), 'துணிவு எல்லாவற்றையும் மாற்றிவிடும்!' (Boldness Changes Everything!)என்கிறது. இந்நிறுவனம் கடந்து வந்த பாதைகளையும், அவர்களின் சாதனைகளையும் பார்க்கும்போது இவை வெறும் வார்த்தைகளல்ல என்பது புரிகிறது.