Tuesday, October 07, 2008

பழி தீர்த்தலும் மன்னித்தலும்!

சகோதரர் கோவி.கண்ணனின் 'இறைவன் படைக்கிறானா?' பதிவின் பின்னூட்டத்தில் திரு. தருமி இஸ்லாம் தொடர்பான சில கேள்விகளை கேட்டிருந்தார். அவரது சந்தேகங்களுக்கான பதில்களை எனக்குத் தெரிந்த அளவில் இங்கு தருகிறேன்.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஒரு கருத்துப் பரிமாற்றமாக மட்டுமே நான் இதில் பங்கு பெறுகிறேனே தவிர விவாதமாக அல்ல. விவாதங்களினால் எந்த ஆக்கபூர்வமான விளைவுகளும் ஏற்படப் போவதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து!

தருமி அவர்களின் கேள்வி 1:

//அக்கிரமத்திற்கு எதிராக பழிதீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருந்தாலும் மன்னித்து விடுவதே சிறந்தது என்று குர்ஆன் சொல்கிறது://


இந்த வாக்கியத்தின் முதல் பகுதியைத் தான் நான் கேள்விக்குட்படுத்துகிறேன். எந்த ஒரு மதத்திலும் பழிதீர்ப்பதையோ, கொலை செய்வதையோ நியாயப்படுத்துதல் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.


//இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்;//


இன்னா செய்தாரையும் ஒறுத்தல் பற்றிப் பேசினால்தானே அது நல்வழிப்படுத்தும் வழியாக இருக்க முடியும். பழிக்குப் பழி என்று போதிப்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்?


//அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)


எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)//


மேற்கண்ட இரு வாசகங்களும் தனிமனித நீதிபற்றிதான் கூறுகிறதாகத் தெரிகிறதேயொழிய நீங்கள் கீழ்க்கண்டவாறு சொல்வதுபோல்- //குழப்பம் விளைவிப்பவனையும், கொலைக்குப் பழியாகவும் தவிர்த்து கொலை செய்யாதே என்பது இஸ்லாமிய அரசாங்கங்களுக்கான கட்டளை.// அரசாங்களுக்கு உரிய கட்டளைகளாகத் தெரியவில்லையே ..

பழிதீர்ப்பதும் கொலை செய்வதும்:

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு. (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (குர்ஆன் 2:179)

பழி தீர்ப்பது அனுமதிக்கப் பட்டிருப்பதன் நோக்கம், 'நாம் பழி தீர்க்கப் பட்டு விடுவோம்' என்ற அச்சத்தினால் குற்றமிழைக்க நினைப்பவர்களும் அதை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான். அப்படி இல்லாமல், என்ன குற்றம் புரிந்தாலும் நாம் மன்னிக்கப் பட்டு விடுவோம் என்ற நிலை இருந்தால், அது குற்றங்கள் மேலும் பெருக வழி வகுக்குமேயல்லாது குறைக்காது.

இன்னா செய்தாரை ஒறுத்தல்:

எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43)

அக்கிரமம் இழைக்கப்பட்ட ஒரு நபர் பழிதீர்த்துக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறதேயொழிய இது கட்டளையோ போதனையோ அல்ல. அப்படி அனுமதிக்கப் பட்டிருப்பதுகூட குற்றச் செயல்கள் பெருகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மாறாக, பழிதீர்ப்பதை விட குற்றவாளியை மன்னிப்பதன் மூலம் இன்னா செய்தாரை ஒறுப்பதே உறுதியான வீரமுள்ள செயல் என்று போதிக்கிறது இஸ்லாம். அனுமதி, போதனை இவ்விரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இதையும் புரிந்து கொள்ளலாம்.

தனிமனித நீதியும் அரசாங்கங்களுக்கான கட்டளையும்:

அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள். (42:39)

எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை. (42:41)

அநீதி இழைக்கப் பட்டவருக்குத்தானே இந்தச் சலுகை? அவர் மீது அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று யார் முடிவு செய்வது? அநீதி இழைத்தவர் செல்வாக்கு மிக்க பலசாலி என்றால், பாதிக்கப்பட்ட எளியவர் எப்படி அவரை பழி தீர்ப்பார்? அநியாயமாக கொல்லப்பட்ட ஒருவருக்காக பழிதீர்க்க யாரும் இல்லை என்றால், கொலை செய்தவர் தண்டனையின்றி தப்பிவிட முடியுமா? தனக்குப் பிடிக்காத ஒரு நபரை ஒருவர் பழி தீர்த்து விட்டு, 'அவர் எனக்கு அநீதி இழைத்ததால்தான் நான் அப்படிச் செய்தேன்' என்று பொய் சொல்லி தப்பிக்க முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் என்ன என்று யோசித்தாலே, பாதிக்கப் பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர, குற்றங்களுக்குத் தண்டனை வழங்க, ஒரு அரசாங்க அமைப்பு அவசியம் என்பது தெளிவாகும். குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமைதானே தவிர தனிநபர்களின் பொறுப்பு அல்ல.

மற்ற கேள்விகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்கிறேன்..

1 comment:

Salahuddin said...

தருமி அவர்கள் இதே கேள்வியை முன்பே கேட்டு அதற்கு சகோதரர் அபூமுஹை பதில் அளித்திருப்பதை காண நேரிட்டது. தருமி அவர்களுக்கு நினைவூட்டலாக அப்பதிவை இங்கே பதிகிறேன்..

மதமாற்றம் ஏன்? -4

இஸ்லாம் இயற்றியுள்ளக் குற்றவியல் சட்டங்கள் மனிதாபிமானமற்றவை, கொடுரமானவை என்றும் குற்றம் புரிந்தவருக்குக் கடுமையான தண்டனையை இஸ்லாம் வழங்குகிறது. என்றெல்லாம் விமர்சிப்பவர்கள், இஸ்லாம் மட்டும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கவில்லை, உலகநாடுகள் அனைத்தும் குற்றங்களுக்கான தண்டனைகளை நிர்ணயித்து குற்றவாளிகளை தண்டித்து வருகின்றன என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் செய்கின்றனர்.

குற்றவாளித் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாரிடமும் மாற்றுக் கருத்தில்லை. தண்டனை கூடுதல் என்பதில் தான் இஸ்லாம் முரண்படுகிறது. தண்டனை கூடுதல் போல் தோன்றினாலும் பாதிக்கப்பட்டவனின் தரப்பில் நின்று இஸ்லாம் தண்டனையை நிர்ணயிக்கிறது.

பாதிக்கப்பட்டவனின் பாதிப்பின் அழுத்தம் வெளியிலுள்ளவர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது. அதனால் ''இதற்கு போய் இவ்வளவு பெரிய தண்டனையா..?'' என்று வெறும் அனுதாப ''அச்சச்சோ''க்களை உதிர்த்து விட்டு, அதே கையோடு இஸ்லாத்தையும் விமர்சிக்கத் தயாராகி விடுகிறார்கள்.

சரி, இதையெல்லாம் இங்கு எழுத என்ன காரணம்? தருமி என்பவர் தமது பழைய பதிவைப் புதுப்பித்து புதிதாக ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார் இதோ அவருடைய புதிய கேள்வி...

//இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.

அந்தக் கேள்வி:

குர்ஆன் 25 : 68: 'அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?' - கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)

5:32: "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.

5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…

கிறித்துவத்தில் 'கொலை செய்யாதே' என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு 'கீதையின் விதிகள்தான்' எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.

இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -
இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?

கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் - நிச்சயமாக கொலை செய்தவனால் - காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.

புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.//

இந்தக் கேள்விக்கான விளக்கத்தைப் பார்க்குமுன் வலைப்பூவில் இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் பற்றி எனக்கு சில கருத்துக்கள் சொல்ல வேண்டியுள்ளது.

இஸ்லாத்தின் மீதான விமர்சனங்கள் வலைப்பதிவில் தொடங்கிய நாளிலிருந்து, காஃபிர், ஜிஹாத், பால்ய விவாகம், பலதாரமணம், அடிமைகள் என இப்படி ஒரே விஷயங்கள் தான் விமர்சனமாக வலைப்பதிவில் வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் வலைப்பதிவர்களால் இதற்கான விளக்கங்கள் எழுதப்பட்டால் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் பழைய விமர்சனமே புதுப்பித்துப் பதியப்படுகிறது வெவ்வேறு பெயர்களில்.

கிராமங்களில் மாடு அல்லது ஆடு அடுத்தவரின் விளைச்சல் நிலத்தில் சென்று மேய்ந்துவிடும். இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டு, நிலத்துக்குச் சொந்தக்காரன் கிராமப் பஞ்சாயத்தில் முறையிட, மாட்டுக்குச் சொந்தக்காரன் பஞசாயத்துக்கு அழைக்கப்படுவான். பிறகு அபராதமாக ஒரு தொகையை, மாட்டுக்கு சொந்தக்காரன் செலுத்த வேண்டுமென்பதோடு சுமுகமாக அந்த வழக்கு முடிந்து விடும்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இவ்வளவு நடந்தது அந்த மாட்டுக்குத் தெரியாது. மறுநாள் அதே விளை நிலத்தின் பக்கம் போக நேர்ந்தால் மீண்டும் நிலத்திற்குள் புகுந்து மேய்ச்சலைத் தொடங்கிவிடும். மேயும்போது சப்தமிட்டு விரட்டினால் சத்தத்தைக் கேட்டு ஓடிவிடும். சப்தம் இல்லாதபோது மீண்டும் நிலத்தில் வந்து மேயும்.

சப்தமிட்டு விரட்டும் போது, விரட்டுகிறார்கள் என்பதை மாடு புரிந்து கொண்டு ஓடி விடுகிறது. ஆனால் எதற்காக விரட்டுகிறார்கள் என்பதை புரிய முடியாததால் மீண்டும் நிலத்தில் புகுந்து மேயத் தொடங்குகிறது. (யாரையும் குறிப்பிட்டு இவ்வுதாரணத்தை நான் சொல்லவில்லை என்பதை அறியவும்) இந்த உதாரணத்தையே இறைவன் திருக்குர்ஆன் 2:171வது வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள். அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

இனி தருமியின் கேள்விக்கு வருவோம்.

இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் விமர்சிக்கப்படுவதை மேலே எழுதியுள்ளேன். கொலைக்குக் கொலை, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், மணமானவர் விபச்சாரம் செய்தால் - பெண்ணை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை. இது போன்ற குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் இயற்றியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இஸ்லாமிய அரசு இத்தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.

25:68வது வசனத்தைப் பார்ப்போம்..

25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

''நியாயமின்றி - காரணமின்றி எந்த மனிதரையும் கொல்ல மாட்டார்கள்'' என்றால், ஒருவன் இன்னொரு மனிதனைக் கொலை செய்திருந்து, அல்லது மேலே குறிப்பிட்டுள்ள மரண தண்டனை பெறும் குற்றங்களை செய்திருந்தால் அவன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அந்தக் குற்றமே கொலைக்குக் கொலை என கொலையாளிக்கும் மற்ற குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவன் கொல்லப்படுகிறான். அதாவது குற்றவாளி தான் செய்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்படுகிறான். இதுதான் ''காரணத்தோடு கொல்லலாம்'' என்பது.

இந்தக் காரணங்கள் இல்லையென்றால் ''அவர் தண்டனை அடைய நேரிடும்'' என்று வசனத்தின் இறுதி வாசகம் எச்சரிக்கிறதே, தருமி புரிந்து கொள்ளவும்.

5:32. இதன் காரணமாகவே, ''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ...

(5:32 வது வசனத்திலும்,) ''கொலைக்குப் பதிலாகவேயன்றி'' யாரையும் கொலை செய்யக் கூடாது என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் முதுகுக்குப் பின்னால் தள்ளிவிட்டு காரணங்களைத் தேடுபவர்களை என்னவென்பது?

அடுத்து...

5:33. அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான். (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

குழப்பம் செய்வதை கொலையை விடக் கடுமையானக் குற்றமாக இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது. ஏன்? எதற்காக? என்று கூடத் தெரியாமல் ஆங்காங்கே பயங்கரவாதங்களை செயல்படுத்தி, நாட்டின் இறையாண்மையை சீர் குலைத்து, மக்களின் நிம்மதியையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் எவரும் குழப்பவாதிகள் - தண்டனைக்குரியவர்கள். இவர்களின் பிணங்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சில வாரங்களுக்கு முன் வலைப்பதிவின் வாதமாக இருந்தது.

அன்றும் நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் குழப்பவாதிகள் இருந்தார்கள். அரசுக்குக் கட்டுப்படுவதாக சொல்லிக்கொண்டு, எதிரிகளுக்கு நாட்டின் ரகசியங்களை அறிவித்துக் கொடுத்துப் போர் செய்ய வரும்படியும் தகவல்களை வழங்கி, சுத்த நயவஞ்சகத் தன்மையில் ஈடுபட்டு குழப்பம் விளைத்துக் கொண்டிருந்தவர்களுக்குத் தான் 5:33 வது வசனத்தில் தண்டனைகள் சொல்லப்படுகிறது. தேசத் துரோகிகளைக் கொல்வதும், நாடு கடத்துவதும் தவறு என்றால் அந்தத் தவறைச் செய்யும்படி இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.

(தருமி புரியும்படியா கேள்வியை வைக்கவில்லை, புரிந்ததை விளக்கியுள்ளேன்)

அன்புடன்,
அபூ முஹை