Thursday, February 07, 2019

முன்மாதிரி வணிகர்!

பித்தோழர்களில் பெரும்பாலானோர் வணிகர்களாக இருந்தனர். குறிப்பாக மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து மதீனாவுக்கு வந்த முஹாஜிர் தோழர்கள். அதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் குறிப்பிடலாம். ஒன்று, மக்காவைச் சுற்றியுள்ள கரடுமுரடான நிலப்பரப்பு விவசாயம் செய்ய ஏற்றதாக இல்லை. இரண்டு, நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே வணிகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும் இடமாக இருந்த மக்கா பிற்காலத்தில் ஒரு முக்கிய வணிக மையமாகவும் ஆனது. மக்காவிலிருந்து புறப்பட்ட வணிகக் கூட்டங்கள் ஷாம், சிரியா, நஜ்ரான் போன்ற பிரதேசங்களுக்குச் சென்று வணிகம் செய்து பொருளீட்டித் திரும்பின. நபி (ஸல்) அவர்களே வணிகப் பெருமாட்டி கதீஜாப் பிராட்டியாரின் (ரலி) வணிகக் கூட்டத்தை வழி நடத்திச் சென்று பெரும் பொருளீட்டித் திரும்பியிருக்கிறார்கள் என்பது இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முந்தைய வரலாறு.

இதெல்லாம் இருந்தும் பிற்காலத்தில் நபித்தோழர்களில் வணிகர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் பெயர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). எல்லா முஹாஜிர் தோழர்களைப் போலவே தம் செல்வங்களையெல்லாம் மக்காவிலேயே விட்டுவிட்டு வெறுங்கையுடன் ஓர் அகதியாக மதீனாவுக்கு வந்த அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை மதீனாவாசியான ஸஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கு, உடன் பிறவா சகோதரராக அறிவித்தார்கள் நபி (ஸல்).

பெருந்தன்மையான மனத்தின் சொந்தக்காரர் ஸஅத், தம் சொத்துகள் அனைத்திலும் சரிபாதியைத் தம் புதிய சகோதரருக்குப் பங்கிட்டுக் கொடுக்க முன் வந்தார். அவற்றை ஏற்க மறுத்த அப்துர் ரஹ்மான் (ரலி) “எனக்கு, சந்தையைக் காட்டுங்கள்” என்று சொன்ன தன்னம்பிக்கை வார்த்தைகள் நபித்தோழர்களின் வரலாற்றில் தனியிடம் பெற்றவை. வாழ்வாதாரம் அளிப்பவன் இறைவன் என்ற பேருண்மையின் வெளிப்பாடாய் அமைந்த வார்த்தைகள் அவை.

அவருடைய உழைப்புக்கேற்ற உயர்வை வழங்கினான் இறைவன். தாம் பெருஞ்செல்வப் பேறுகளைப் பெற்றுள்ளதைப் பற்றிப் பின்னொரு சமயத்தில் மக்களிடம் பேசும்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) சொன்ன விளக்கங்களில் ஒன்று இறை நம்பிக்கையுள்ள வணிகர்களுக்கு சிறந்ததொரு பாடமாக உள்ளது. அவர் சொன்னார்:

நான் குறைந்த ஆதாயத்தை (லாபத்தை)க் கூட அலட்சியப்படுத்தியதில்லை.
என்னிடம் விலை கேட்கப்பட்ட எந்தப் பொருளையும் விற்பனை செய்வதில் வீணாகக் காலம் தாழ்த்தியதில்லை.
நான் தவணை முறையில் விலையைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் விற்பனை செய்வதில்லை.
இந்த மூன்று காரணங்களையும்கூட நான் என் முன்னேற்றத்திற்கான அடிப்படைகளாகக் கருதுகிறேன்”

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் வாழ்க்கையைப் பற்றி ‘முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)‘ என்ற தலைப்பில் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களும் கே.தாஜுத்தீன் அவர்களும் இணைந்து ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் வெளியீடான இந்த நூல் அநேகமாக அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை பற்றி இதுவரை தமிழில் வெளியான ஒரே நூலாக இருக்கும் என்று நினைக்கிறேன். படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எளிய மொழி நடையில் அத்தோழரின் முழு வாழ்க்கை வரலாறும் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

நூல்: முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)
நூலாசிரியர்கள்: ஏம்பல் தஜம்முல் முகம்மது / கே. தாஜுத்தீன்
பதிப்பகம்: இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

No comments: